நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் விருப்ப மனுக்கள் போணியாகாததால் அக்கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடப்போவதாக சமக கட்சித் தலைவர் சரத்குமார். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைப் பெற்றுச் செல்லலாம் எனவும் சரத்குமார் அறிவித்தார். இதன்படி கடந்த 9-ஆம் தேதி விருப்ப மனுக்கள் வினியோகிக்கும் பணி சமக சார்பில் தொடங்கியது.
விருப்ப மனுவை வினியோகிக்க அக்கட்சித் தலைவர் சரத்குமார் காத்திருந்தார். ஆனால், முதல் நாள் விருப்ப மனுக்களை யாரும் பெறவில்லை. இதைச் செய்தி சேகரிக்க சென்றிருந்த நிருபர்களும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். பின்னர் நிருபர்களைச் சமாளித்து சரத்குமார் அனுப்பி வைத்தார்.
இதன்பின்னர் மாலையில் முதல் நாளில் 36 பேர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டதாக சமக சார்பில் பத்திரிகை நிறுவனங்களுக்கு செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சொற்ப அளவிலேயே விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே 39 தொகுதிகளில் போட்டியிடுவதைக் காட்டிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என சரத்குமாருக்கு அக்கட்சியினர் ஆலோசனை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.