வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ராசிதான் காரணம் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டலடித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் நேரடி போட்டி நிலவியது.  இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் திமுக பிரமுகர்களின் வீட்டிலிருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுவும் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வேலூரில் உள்ள வார்டுகள் வாரியாக பணம் பிரிக்கப்பட்டு கவர்களில் போடப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
இதுபற்றி வருமான வரித் துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் வேலூர் தொகுதி ரத்து செய்யப்பட்டதற்கு வைகோவின் ராசிதான் காரணம் என்று மறைமுகமாக வைகோவை கிண்டலடித்திருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். 

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “மேட்ச் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே முதல் பால் நோ பால்.  எல்லாம் அண்ணன் ராசி” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவுக்கு மேலே  துரைமுருகனுக்கு வைகோ மாலை அணிவிக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எஸ்.வி.சேகரின் இந்த நையாண்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர்வாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.