தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல், ரஜினி என்று பெரும் ஆளுமைகள் என்னதான் பெரிய அரியணை போட்டு அமர்ந்திருந்தாலும் கூட திடீரென முளைக்கும் சில நாயகர்கள் தெறிக்க விடுவார்கள். 

அப்படி ரஜினி மற்றும் கமல் இருவரையும் அதிர வைத்தவர் ராமராஜன். பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட், பஞ்சு மிட்டாய் டிரெஸ், பட்டைய கிளப்பும் பாட்டு என்று வருஷத்துக்கு நாலு படம் இறக்குவார் . அத்தனையையும் நூறு நாள் கொண்டாடும். இப்பேர்ப்பட்ட ராமராஜன் பிறகு சில வருடங்களில் மெதுவாக மார்க்கெட் இழந்தார். 

அதேவேளையில் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யானார். அரசியலில் ஏறுமுகம் என்று நினைத்தவருக்கு ஜெயலலிதாவின் அதிகார ஆசீர்வாதத்தால் கழக நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கிடைத்தது. வாழ்க்கையும் ஓடிக் கொண்டு இருந்தது. 

மனைவி நளினியிடமிருந்து பிரிவு, கிறிஸ்துவ ஆராதனை சொற்பொளிவாளரானது என்று அவரது வாழ்க்கை அவ்வப்போது தடம் மாறியது. வயதான காலத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்து கடும் தோல்வி, பண நஷ்டத்தை தழுவினார். ஆனாலும் அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளர் வாய்ப்பு மட்டும் அவருக்கு உணவளித்து வந்தது. 

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கிய பிறகு அவரது அணியில் ஐக்கியமானார். ஆனால் மீண்டும் எடப்பாடியுடன் கைகோர்த்த பன்னீர், முணுசாமி மற்றும் நத்தம் விசுவநாதனையே டீலில் விட்டபோது ராமராஜனுக்கு மட்டும் கை கொடுப்பாரா என்ன?

ஆக இப்போது பேச்சாளர் வாய்ப்புகளும் இல்லாமல் வீட்டு வாடகை கொடுக்கவே சங்கடப்படுகிறாராம் ராமராஜன். எடப்பாடி பழனிசாமியும் கண்டு கொள்வதில்லையாம். அதனால் விரைவில் அ.தி.மு.க.வுக்கு முழுக்கு போட இருக்கிறாராம். அநேகமாக இவரை விரைவில் செயல்தலைவரிடம் அருகில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.