தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் டப்பிங் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ரஜினி இடையே மீண்டும் முக்கிய பத்திரிகையாளர்களை சந்தித்து பேச ஆரம்பித்துள்ளார்.

அரசியல் கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று அறிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர் அறிவித்தது முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் ரஜினி கூறியபடி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அடுத்த ஆண்டு கட்சி ஆரம்பித்தே ஆக வேண்டும்.

ஆனால் ரஜினியோ தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா படத்தில் நடிக்க தேதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் திடீரென ரஜினி வீடு கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாக காட்சி அளிக்கிறது. காரணம் ரஜினியின் அரசியல் ரீதியிலான நண்பர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து செல்கின்றனர். இதே போல் தமிழ் ஊடக உலகில் முக்கிய நபர்களாக இருக்க கூடியவர்களும் போயஸ் கார்டன் பக்கம் தென்படுகின்றனர்.

தினமும் மாலை நேரத்தில் டப்பிங் ஸ்டூடியோவிற்கு சென்றுவிடும் ரஜினி, காலையில் பத்து மணியில் இருந்து பிற்பகல் வரை முக்கிய நபர்களை சந்தித்து வருகிறாராம். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐடி என்ஜினியர்கள், பத்திரிகையாளர்கள் என பல்துறை நிபுணர்களும் தினமும் ரஜினியை சந்திக்க காத்துக்கிடக்கின்றனர்.

இது குறித்து ரஜினிக்கு நெருக்கமான ஒரு சிலரிடம் பேசிய போது, கட்சி அடுத்த ஆண்டு ஆரம்பிப்பது உறுதி. அதற்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து துறை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள ரஜினி ஆர்வம் காட்டுகிறார். இதனால் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிபுணர்களை நேரில் அழைத்து ரஜினி பேசுகிறார் என்று கூறி முடித்துக் கொண்டனர்.