புலம் பெயர்ந்தோர் நடுத்தெருவில் உள்ளனர். நான் பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ என்னை கடந்து செல்லும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன். 
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 அன்று முதல் கட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. 52 நாட்களை எட்டியுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. 18-ம்  தேதி முதல் புதிய வடிவில் ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஊரடங்கு 50 நாட்களைக் கடந்த பிறகும் புலம் பெயர்ந்த தொழிலார்களின் பிரச்சினை இன்னும்  தீர்ந்தபாடில்லை. இன்னமும்கூட நெடுஞ்சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல் செல்லும் வழியில் அவர்கள் உயிரிழக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தொழிலார்களின் கண்ணீர்க் கதைகள் தினந்தோறும் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைவிட பசியால் நாட்டில் பலி ஏற்படும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணம் உள்ளனர். பல தொண்டு நிறுவனங்கள் நல்லமனம் படைத்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கும் புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்களை வழங்கியும் வருகிறார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் சில பிரபலங்கள்கூட உதவியை செய்துவருகிறார்கள்.

 
ஊரடங்கால் தவித்து வந்த கிராம மக்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை  செய்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் . இதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட தேவைகளையும் வழங்கிவருகிறார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் கடன் வாங்கியோ பிச்சை எடுத்து சக மனிதனுக்கு உதவுவேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புலம் பெயர்ந்தோர் நடுத்தெருவில் உள்ளனர். நான் பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ என்னை கடந்து செல்லும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன். எனக்கு அவர்கள் திருப்பி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, வரும் வழியில் எங்களுக்கு ஒருவர் நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி உதவினார் என என்னை நினைத்தாலே போதும்” என்று பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடங்களில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்தப் பதிவு வைரலாகிவருகிறது.