விளம்பரப்படங்களில் நடிப்பதை முழுநேரப் பணியாகவும் சினிமாவில் பார்ட் டைம் நடிகராகவும் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் பழைய இளையதிலகம் பிரபு விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார். அந்த இணைப்பு நிகழ்ச்சிக்காக ராகுல் காந்தி சென்னை வரவிருப்பதாகவும் சில செய்திகள் சென்னையை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன.

பிரபுவை காங்கிரசில் இணைக்க காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார், பிரபு குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவரது அண்ணன் ராம்குமார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.

சினிமாவில் சிறுகச்சிறுக சம்பாதித்து அரசியலில் கொண்டுபோய்க்கொட்டி, அப்பா கற்ற பாடத்தை அவ்வளவு லேசில் மறந்துவிடுவாரா பிரபு?  விளம்பரப்படங்களில் நடிக்கும்வரைதான் தங்கக்காசு, அரசியலுக்குள் நுழைந்தால் செல்லாக்காசு என்பது புரிந்தோ என்னவோ அரசியல் வதந்திகளுக்கு அவசர அவசரமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரபு.

"நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அது வெறும் வதந்திதான்..கட்சியில் இணையும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. அப்படி யாரும் என்னைவும் அழைக்கவில்லை. ராகுல்காந்தி எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தால், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று தெரிவித்தார்.