மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் இணைந்தவர், நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட அவர், 92,249 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமீலா நாசர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்துவந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.