ரஜினியின் பிறந்த நாள் நெருங்கும் நிலையில், அவரது அரசியல் பயணம் பற்றிய ஹேஸ்யங்களும், எதிர்பார்ப்புகளும், அலசல்களும், வதந்திகளும் தாறுமாறாக சிறகு விரிக்கின்றன. பிறந்தநாளன்று ரஜினி என்னதான் அறிவிக்கவோ, செய்யவோ போகிறார் என்பதில் மற்ற கட்சி தலைவர்களின் பல்ஸ் எகிறி நிற்கிறது. இத்தனைக்கும் ‘நான் வழக்கம்போல் சென்னையில் இருக்க மாட்டேன். என் பிறந்தநாளை ஆடம்பரமா கொண்டாடாதீங்க!’ என்று ரஜினி, சமீபத்தில் நடந்த தர்பார் ஆடியோ ரிலீஸ் விழாவில்  வெளிப்படையாக அறிவித்தும் விட்டார். ஆனாலும் அவர்  அரசியல் ரீதியாக தன் பிறந்தநாளில் ஏதாவது சொல்வார், செய்வார்! என்று பத்திரிக்கைகளும், மீடியாக்களும், அவரை சார்ந்து அரசியல் பிழைப்பவர்களும் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது, ரஜினியின் அரசியல் வருகையை எதிர்க்கும், இடைஞ்சலாக நினைக்கும் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கடும் கடுப்பைத் தருகிறது. 

இரண்டாம் நிலை தலைவர்கள் ‘அதான் எந்த அரசியல் அறிவிப்பும் இருக்காது!ன்னு அவரே சொல்லிட்டாரே அப்புறமென்ன?’ என்று கேட்கவும் செய்கின்றனர். இதற்கு பதில் சொல்லும் அந்த தலைவர்களோ ‘யோவ் ரஜினியை நம்ப முடியாது. எப்ப வேணா எது வேணா செய்ற மனுஷன். அவரு சொல்றாரேன்னு மெத்தனமா இருந்துட முடியாது.’ என்று தங்களின் கவலையை கொட்டிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளான  வரும் 12-ம் தேதியன்று ரஜினி அரசியல் ரீதியாக ஏதாவது அறிவிப்பாரா? என்று, அவரது அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியனிடம் கேட்டதற்கு “வாய்ப்பே இல்லை. எல்லா பிறந்த நாட்களையும் போலவே அவரது இந்த பிறந்தநாளும் தமிழக முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அதைத் தவிர அந்த நாளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த செய்தியுமே இருக்காது. அரசியல் ரீதியாக ரஜினி எதையும் அன்று அறிவிக்க மாட்டார். ஆனால் அடுத்த ஆண்டு அவரது பிறந்த நாள் நிச்சயம் வெகு விசேஷமாக இருக்கும். காரணம், அடுத்த ஆண்டு அவர் அரசியல் கட்சியை துவக்குவார், சட்டமன்ற தேர்தலைச் சந்திப்பார்.” என்றிருக்கிறார். 

இந்த நிலையில் சீமான் கட்சியை சேர்ந்தவரும், அதிரடி நடிகருமான மன்சூர் அலிகானோ “ரஜினி அப்படித்தாங்க. தன்னோட புதுப்படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி இப்படி அரசியல் பிரவேசம் பற்றி ஏதாவது வெளியிடுறது வழக்கம். அதைத்தான் இப்பவும் சொல்லிட்டிருக்கார். அவரு நடிப்புல எனக்கு சீனியர். அதனால் அவரை மதிக்கிறேன். ஆனால் அதுக்காக அவரது அரசியல் அறிவிப்புகளை எல்லாம் ஏத்துக்க முடியாது. அநியாயத்தால பாதிக்கப்பட்டவங்க, அதை நிவர்த்தி பண்றதுக்கு அரசியலுக்கு வர்றது வழக்கம். அப்படி இந்த ரஜிக்கும் கமலுக்கும் தமிழக மக்கள் என்ன அநியாயத்தை செஞ்சுட்டாங்க? அவங்க இப்படி அரசியலுக்கு வர்றாங்க!” என்று கடுப்பாய் கேட்டிருக்கிறார். 
நல்ல லாஜிக்கான கேள்விதான் போங்க!