கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி  சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார்

நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்;- விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை முன்பு நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு வாதம் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டாதாகவும்,  தடுப்பூசி குறித்து உள்நோக்கத்தோடு அவதூறு கருத்து தெரிவிக்கவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.