ஒரு கட்சி மற்றும் அதன் வேட்பாளரின் தரம் அக்காட்சியில் உள்ளவர்கள் பேசும் பேச்சிலேயே தெரிந்துகொள்ளலாம் என நடிகரும் மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எடப்பாடி பழனிச்சாமியை கீழ்த்தரமாக விமர்சித்துள்ள நிலையில், நடிகர் கார்த்திக் திமுகவை இவ்வாறு மறைமுகமாக விமர்சித்துள்ளார். 

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக  திமுகவினர் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன்னர் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர், ஆ. ராசா  திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையுடன் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையை ஒப்பிட்டு பேசினார். 

அப்போது ஸ்டாலின் அரசியல் களத்தில் படிப்படியாக உயர்ந்து தற்போது முதல்வர் வேட்பாளர் நிலைக்கு வந்திருப்பதாகவும், எனவே அவர் முறையாக திருமணம்  நடந்த தாய்க்கும் முறையாக பிறந்த குழந்தை ஏன்றும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்தவர் என்பதால், அவர் கள்ள உறவில் பிறந்த குழந்தை என்றும் கூறினார். அவரின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் கண்ணியமாக பேசவேண்டும்.  

தங்கல் பிரச்சாரத்தை பெண்கள், குழந்தைகள் அனைவரும் தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் பலர் பேசுகின்றனர். ஒரு வேட்பாளரின் தரம் மற்றும் அக்கட்சியின் தரம் அக்காட்சியில் இருப்பவர்கள் பேசும் பேச்சிலேயே அக்காட்சியின் குணத்தையும், அதன் தரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அவர்களிடம் நாகரீகம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் பேசும்போது உண்மையாக குறை கூறுகிறார்களா, வேண்டுமென்றே பேசுகிறார்களா என்பது பொதுமக்கள் எளிதில் அறிந்து கொண்டு விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படிப் பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிலைமை என்னவாகும். அவர்களின் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும், எனவே  அதுபோன்றவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது. மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.