அரசியலை கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வர்கள் என நாம் நினைப்பதால்தான் இன்று அரசியல் கறை படிந்து கிடைக்கிறது என்று மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான  கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சினிமாவை 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் பேசி வந்திருக்கிறேன். ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் சினிமாவில் வந்தால், லாபம் குறைந்துவிடும் என்ற ஒரே காரணத்துக்காக சினிமா டிஜிட்டல்மயத்தை அப்போது தாமதப்படுத்தினர்கள். இப்போது சினிமா டிஜிட்டல் மயமாகிவிட்டது. மீடியா என்பது வெறும் டிஜிட்டல்மயமாக பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் அல்லாமல், அது பேராயுதமாகவும் உள்ளது. உங்கள் குரலை உலகம் முழுக்க சேர்க்கும் ஊடகமாகவும் அது மாறி விட்டது யதார்த்தம்.


அதை நீங்கள் கையில் எடுக்கும் நேரமும் இப்போது வந்துவிட்டது. நான் இங்கே உங்களுக்கு விடுக்கிற அழைப்பு என்பது தேர்தலில் வாக்களிக்க மட்டுமல்ல, உங்களுடைய கடமையைச் சரியாக ஆற்ற வேண்டும் என்பதற்காகவும்தான். மாணவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்காதீர்கள். அரசியலை கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வர்கள் என நாம் நினைப்பதால்தான் இன்று அரசியல் கறை படிந்து கிடைக்கிறது. அதை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் படித்த இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது.” என்று கமல் ஹாசன் பேசினார் 
பின்னர் மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கமல் ஹாசன், “அரசியலில் வாரிசு அரசியல் சரியா என்று கேட்டால், அது சரியாக இருக்காது என்பதே என் பதில். வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனநாயகத்தை கொண்டுவந்தோம். தமிழக அரசியலிலிருந்து குடும்ப அரசியலை பிரிக்க முடியாது என்கிறார்கள். அதனால்தான், நானும் என் குடும்பத்தை பெரிதாக்கினேன். நீங்கள்தான் என் குடும்பம்.” என்று பதில் அளித்தார்.