தூத்துக்குடியில் உள்ள விவி ஆலைக்குள் அதிகாரிகள் நுழைந்து ரெய்டு நடத்தியுள்ளனர். இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது திமுக வேட்பாளர்களுக்கு விவி நிறுவனத் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது தான் என்கிறார்கள்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் நிறுவனத்திற்குள் போலீசார் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் நுழைந்த மேற்கொண்ட ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் உள்ள கடல் மணலில் கலந்துள்ள தாதுக்களை பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்தி வருபவர் வி.வைகுண்டராஜன். தமிழகத்தில் உள்ள மிகப்பெரும் செல்வந்தவர்களுள் மிக முக்கியமானவர் இவர். கடந்த 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் போயஸ் கார்டனுக்கு மிக மிக நெருக்கமாக இருந்தார் வைகுண்டராஜன். ஜெயா தொலைக்காட்சியின் பெரும்பான்மை பங்கு ஒரு காலத்தில் வைகுண்டராஜன் வசம் தான் இருந்தது.

மேலும் மதுரையை தாண்டி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் வரை அரசியல் ரீதியாகவும் பெரும் செல்வாக்கு கொண்டவர் வைகுண்டராஜன். ஒரு காலத்தில் அதிமுகவிற்கு நெருக்கமாக இருந்தாலும் பிறகு திமுகவின் கனிமொழி பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், நாம் தமிழர் கட்சியின் சீமான் என நாடார் சமுதாயத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களுடன் இவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2016 தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு சாதகமாக இவர் செயல்பட்டதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டும் அல்ல வேறு எந்த நிறுவனமும் தமிழகத்தில் தாது மணல் எடுக்க தடை விதித்து சட்டம் நிறைவேற்றினார் ஜெயலலிதா.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இவை வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலைகள், கிடங்குகள் சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில், அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வி.வி. மினரல், பிஎம்சி மற்றும் ஐஎம்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டபோது, கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது மணல் 3,13,981 டன் இருப்பு வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. விதிகளை மீறி தாது மணலை இருப்பு வைத்திருந்த 19 கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள விவி டைட்டானியம் பிக்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லாரிகளில் தாது மணல் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிப்காட் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த லாரிகளை மறித்து போலீசார் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட தாது மணலை கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த பல கோடி மதிப்பிலான 9 டன் தாதுமணலை போலீசார் பறிமுதல் செய்து லாரியை சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் புவியியல் துறை அதிகாரி சுகிதா ரஹீமா லாரியில் இருந்த தாது மணலை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்.
இதையடுத்து தூத்துக்குடி தாசில்தார் மற்றும் புவியியல் துறை அதிகாரி சுகிதா ரஹீமா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான அதிகாரிகள் விவி டைட்டானியம் நிறுவனத்தின் உள்ளேயும் சீல் வைக்கப்பட்ட கிடங்குகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதன்காரணமாக ஆலை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்மையில் தான் விவி மினரல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நியுஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாக மேலாளர் சுப்ரமணியம் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியை சந்தித்து கொரோனா பேரிடம் நிதியை வழங்கியருந்தது.

அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் சுப்ரமணியம் உதயநிதியை சந்தித்தது குறித்து கேள்வி எழுந்தது. அதாவது சுப்ரமணியம் முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால் அவர் உதயநிதியை சந்தித்து நிதி அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திடீரென தூத்துக்குடியில் உள்ள விவி ஆலைக்குள் அதிகாரிகள் நுழைந்து ரெய்டு நடத்தியுள்ளனர். இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது திமுக வேட்பாளர்களுக்கு விவி நிறுவனத் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது தான் என்கிறார்கள். அதே சமயம் வைகுண்டராஜன் பாஜக வேட்பாளர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான் வைகுண்டராஜன் நிறுவனத்திற்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
