கருணாநிதியை சிறைபிடித்து, மு.க.அழகிரியை கட்டம் கட்டி கனிமொழியை துரத்த தருணம் பார்த்து அதிகார வெறியில் மு.க.ஸ்டாலின் குடும்பம் அலைவதாக அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. 

நமது அம்மா நாளிதழில் இன்று வெளியான கழகத்தின் சிறப்பும் கனிமொழியின் வெறுப்பும்’ என்கிற கட்டுரையில், ‘’ மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் அதனை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு விமர்சிக்கிறார்கள் வில அரசியல் விற்பன்னர்கள். இதற்கிடையில் கழகத்தில் ஒற்றுமை இருப்பது போல் நாடகம் ஆடுவதாக கனிமிழி கருத்து தெரிவித்து இருக்கிறார். 

அதிகார பதவிக்காக குடும்பத்தோடு முகாமிட்டு கேட்ட துறை தரவில்லை என்றதும் ஆதரவு கடிதத்தை தரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டு வருவது.. தகனம் செய்து முடிக்கும் வரை இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து விட்டு மறுநாளே அந்த ஆட்சியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவித்து பதவி பற்று இல்லாத பட்டினத்தார் போல பம்மாத்து காட்டுவது, மச்சானுக்கு மந்திரி பதவி இல்லை என்றால் கணநொடியும்  எங்களால் பொறுக்க முடியாது என குஜ்ரால் அரசையே குப்புற கவிழ்த்தது, தங்கள் அதிகார பசிக்காக ஒரு அவசியமற்ற இடைத்தேர்தலையே தேசத்திற்காக உருவாக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழப்புக்குள்ளாக்கியது.


பாராளுமன்றத்தில் பதில் அளிக்கிற திறமையோ, மொழியாற்றலோ இல்லாது போனாலும், அழகிரிக்கு வளமான உரத்துறைதான் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிறகு அவைக்கே வராமல் பாராளுமன்றத்திற்கு பயந்து குலுமனாலிக்கும், நேபாளத்துக்கும் ஓடிச்சென்று பதுங்கி கொள்வது.. இதற்கும் மேல் மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை அதிகாரங்களில் உட்கார்ந்து கொண்டு 9 பேருக்கு மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொண்டு ஈழத்து இன அழிப்பை தடுக்க முடியாமல் ‘ ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எந்த வகையில் உதவ முடியும்’ என தொடை நடுங்கி கோழைகளாக புனிதமிக்க சட்டப்பேரவைக்குள்ளேயே புலம்புவது இவையெல்லாம் வரலாற்று பரிதாபங்கள்.

 

அதனால் திமுக வென்றாலும் வேஸ்ட். வி.பி.சிங் தொடங்கி ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் இப்படி அத்தனை பிரதமர்களின் அமைச்சரவையிலும் மந்திரி பதவி வாங்கி திமுக தமிழ்நாட்டுக்கு செய்தது எல்லாமும் தங்களுக்கான பண அறுவடை மட்டுமே அன்றி மக்களுக்காக துறும்பையும் கிள்ளிப்போட்டது கிடையாது. அதனால் திருமதி கனிமொழி நம்மை பார்த்து விமர்சித்தது தங்களிடம் உள்ள 37-ம் குஞ்சு பொறிக்காத கூமுட்டைகளாய் போச்சே என்னும் நமச்சலால் தான். அப்பனை சிறைபிடித்து அண்ணனுக்கு கட்டம் கட்டி, தங்கையை துரத்த தருணம் பார்த்து அதிகாரவெறியில் அலையும் குடும்ப கட்சி அண்ணா திமுகவின் அண்ணன்மார்கள் ஒற்றுமையை விமர்சிப்பது வெட்கக்கேடு அன்றோ’’ என விமர்சித்துள்ளது.