தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது. முன்பைவிட தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளித்துவரும் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். 
உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்துவரும் தேமுதிக தலைவர், பழையபடி எப்போது அரசியல் களத்துக்கு வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக பழைய மிடுக்கோடு வருவாரா என்பதே தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் பழையபடி மாறிவருவதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், தேமுதிக கொண்டர்களுக்கு இனிப்பான செய்தியைத்  தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மருத்துவர் சங்கர், “விஜயகாந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக்  காணமுடிகிறது. பள்ளி, கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகளை எல்லாம் விஜயகாந்த் என்னிடம் பகிர்ந்துகொண்டார். விஜயகாந்த்க்கு நரம்பியல் தொடர்பான நோய் இருந்துள்ளது. ஆனால், அதை தொடக்கத்திலேயே கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டனர். வெளி நாடுகளுக்கு சென்று வந்தபோதும் அந்தப் பிரச்னையைச் சரி செய்ய முடியவில்லை.


அந்தப் பிரச்னையை தற்போது அக்குபஞ்சர் முறையில் சரி செய்துவருகிறோம். அக்குபஞ்சர் சிகிச்சையில் இன்னும் 60 நாட்கள் சிகிச்சை பாக்கி உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் அவருக்கு  நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். தற்போது அவருக்கு 45 சதவீத அளவுக்கு உடல்நிலை சார்ந்த பிரச்சனைகள் சரியாகிவிட்டன. எனவே, நீங்கள் எதிர்பார்த்ததை போலவே சிறுத்தையாக, வேங்கையாக விஜயகாந்த் வருவார். விஜயகாந்துக்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது. முன்பைவிட தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார்.” என்று மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். 
அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சிகிச்சை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.