கவுன்சிலர் பதவி முதல், குடியரசு தலைவர் பதவி வரை வேட்பாளாராக ஒருவரை தேர்வு செய்ய உழைப்பு மட்டுமே ‘அளவுகோல்’ ஆக இருப்பதில்லை. இளமையை, உழைப்பை, பணத்தை, நேரத்தை இழந்து நாயாக உழைக்கும் பலர் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சீட் வாங்க முடியாமல் வெற்றுக் கனவுகளோடே காலமான கொடுமையை இந்த தேசம் கண்டிருக்கிறது.  

ஆனால் வெகுஜன விஷயங்களுக்குள் நுழையாமலே, எந்த போராட்டத்திலும் கலக்காமலே, சொட்டு வியர்வை சிந்தாமலேயே சிலர் பைபாஸில் பதவியை அல்லது சீட்டை தட்டிச் செல்வதும் இந்த ஜனநாயக தேசத்தின் தலையெழுத்து. அந்த வகையில் இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் சில வேட்பாளர்கள் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறார்கள். இரண்டு அணிகளிலுமே இப்படியாப்பட்டவர்கள் இருக்கிறார்கள். 

அவர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், தன்னைப் போலவே பைபாஸில் சீட் வாங்கி, எல்லோரின் ஏகோபித்த எரிச்சலுக்கும் ஆளாகியிருக்கும் கதிர் ஆனந்த் (துரைமுருகனின் மகன்)-ஐ எதிர்த்து நிற்கிறார் மனிதர். பரபரவென பிரசாரத்துக்கு தயாராகிவிட்ட ஏ.சி.எஸ். தட்டிவிட்டிருக்கும் சில ஸ்டேட்மெண்டுகளை கண்டால் கன்னாபின்னாவென சிரிப்பு வருகிறது. அதில் ஹைலைட்டாக சில.... 

* இரட்டை இலை சின்னம் என் தாய்வீட்டு சீதனம். முப்பது வருஷமா தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு மீண்டும் கிடைத்த பெற்றவ வீட்டு வரம் இது. (ஹும்ம்ம்ம்....அழலாம் கூடாது. கண்ண துடைங்க, சிரிங்க.)

* ஆக்சுவலா வேலூர் தொகுதி, அ.தி.மு.க.வின் கோட்டை. அதனாலதான் போன தடவை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வீழ்த்தியது. ஆனா இந்த வாட்டி என்னை வீழ்த்திய அ.தி.மு.க.வோடே சேர்ந்து வலுவாக களமிறங்குகிறேன். (என்னா ராசதந்திரம் இது?)

* என்னை ஒரு குறிப்பிட்ட சாதிக்காரனா பார்க்காதீங்க ப்ளீஸ். என் தொழில் இடங்களில் கூட எல்லோருக்கும்தான் வாய்ப்பு கொடுத்திருக்கேன். நான் ஒரு  குறிப்பிட்ட சாதிக்காரன் இல்லை. (அப்ப அவர் சாதி பயலுக எல்லாம் வேற எங்கேயாச்சும் கெளம்புங்கப்பா, பொதுவான ஆளாம்ல!)

* துரைமுருகனின் மகனுக்கு சீட் கிடைத்ததை அந்த கட்சிக்காரங்களே விரும்பலை. சில தி.மு.க. நிர்வாகிகள் என்கிட்ட பேசினாங்க. ‘வாரிசு அரசியலை விரும்பலை’ன்னு சொன்னாங்க. கதிர் ஆனந்தை நான் எளிதில் வெல்வேன். (அப்படின்னா தேனி நாடாளுமன்ற  தொகுதிக்காரங்க அங்கேயிருக்கிற எதிர்கட்சி வேட்பாளர்ட்ட இந்நேரம் பேசியிருப்பாங்கன்னு சொல்லுங்க. ரவீந்திரநாத்தையும் எளிதா வெல்லலாம் இல்லீங்லா ஏ.சி.எஸ்?)

* நான் ஏன் மஞ்ச துண்டு போட்டிருக்கேன்னா, ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் நான் இருக்கும்போது ‘சம்முவத்த எங்கே காணோம்?’ அப்படின்னு மக்கள் தேடி அலைபாயக்கூடாது பாருங்க, அதுக்குத்தான் இந்த துண்டு. (அப்ப கருணாநிதி அந்த துண்டைப் போடவும் இதுதான் காரணமா? அது கெடக்கட்டும், ஆயிரம் தொண்டகளுக்கு மத்தியில் நான்! அப்படின்னு சொன்ன ஸ்டேட்மெண்டுதாம்னே ஹைலைட் காமெடி)