திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவைக்கு வருவதில் விலக்கு கோரிய தீர்மானம், ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கருணாநிதி வீட்டில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அவர், கோபாலபுரம் இல்லத்தில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

கருணாநிதியின் பிறந்த நாள் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில், அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போதும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், 15-வது சட்டமன்ற கூட்டத்தொடரில் கருணாநிதி பங்கேற்க விலக்கு கோரியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கூட்டத்தில் பங்கேற்க விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.