டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேரின் தகுதிநீக்கம் செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் அமைச்சர்களுக்கு உதவியாக 20 எம்.எல்.ஏக்களை செயலர்களாக முதல்வர் கேஜ்ரிவால் நியமித்தார்.

இதற்காக டெல்லி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. டெல்லி மாநில அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவாலோ 20 செயலர்களை நியமித்தார். இதையடுத்து 20 எம்.எல்.ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார்.

தகுதிநீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டாது செல்லாது என உத்தரவிட்டதோடு, அவர்களை தகுதிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.