இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழக  மக்களுக்கு உதவிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர தீர்மானம் கொண்டுவர உள்ளார். 

விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல மடங்கு விலையானது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தொட்டுள்ளது. பச்சை மிளகாய் விலையோ கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு பால் பொருட்கள் கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இலங்கை மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் இலங்கையில் குழந்தைகளுடன் வாழ முடியாமல் தினந்தோறும் தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு உதவி

இந்தநிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.7,600 கோடிநிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால் இந்தியா வழங்கிய உதவிகள் தீர்ந்துவிட்டதால் மீண்டும் கடனுதவி கேட்டு இலங்கை கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வந்த நிலையில், இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. இதே போல உணவு இல்லாமல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் நிவாரணம் பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உறுதியோடு உள்ளதாகவும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி செய்து தருமாறும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம்

இந்தநிலையில் மத்திய அரசு இது தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்காத நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உணவுக்கு வழியின்றி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க கோரியும், அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார் என கூறப்படுகிறது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பவுள்ளது.