உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த நெருப்பு இப்போது ஊருக்கே தெரிய துவங்கிவிட்டது! என்கிறார்கள். என்ன விவகாரம் தெரியுமா? ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் இடையில் நடக்கும் யுத்தம்தான். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நடந்தது. அப்போது தங்கள் கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்காக அ.தி.மு.க.வினர் அத்தனை பேரும் குவிந்து வேலை பார்த்தனர். ஆனால் தங்கள் கட்சியின் வேட்பாளருக்காக தி.மு.க.வின் மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வரவே இல்லை. விசாரித்தபோது ‘பிரசாரத்துக்கு வர அவரை தலைமை அனுமதிக்கவில்லை’என்று தகவல்.

 

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வுக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தாவை வரவேற்க சென்னை வருவதற்காக டெல்லியிலிருந்து கிளம்ப கனிமொழி தயாரானார். ஆனால் அந்த வரவேற்பு பொறுப்பு உதயநிதியிடம் தரப்பட்டது. விசாரித்தப்போது ‘கனிமொழி வரவேற்க தலைமை அனுமதிக்கவில்லை.’ என தகவல். மம்தா கலந்து கொண்ட அந்த நிகழ்வில் ஸ்டாலின் போல் கருணாநிதியின் நேரடி வாரிசான கனிமொழி மேடையில் இல்லை. மம்தாவின் கண்கள் அவரை தேடிப்பிடித்து, கீழே பார்வையாளர்களின் வரிசையைல் கண்டுபிடித்தது.  அரசியலில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் மம்தா, இப்படி அண்ணனாலேயே தங்கை தவிர்க்கப்படுவதை உணர்ந்தார். விசாரித்தபோது ‘மேடையில் அவருக்கு இடம் வேண்டாம் என தலைமை  உத்தரவிட்டதாக.’ தகவல். இப்போது இந்தியாவிலேயே மிக முக்கிய கட்சியாக தி.மு.க. வளர்ந்து நிற்கிறது. நாடாளுமன்ற துணை சபாநாயகர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அந்தப் பதவியை கனிமொழிக்கு வழங்கிட பா.ஜ.க.வே முடிவெடுத்துவிட்டதாம்.

அவர் அங்கம் பெற்றுள்ள கட்சியின் தலைவர் எனும் முறையில் ஸ்டாலினிடம் மரியாதை நிமித்தமாக ஒப்புதல் கேட்டபோது, எந்த ரியாக்ஷனும் இல்லையாம். ’அவருக்கு அப்படியொரு பெருமை மிகு பதவி வருவதில் தலைமைக்கு விருப்பமில்லை.’ என தகவல். ஆக இப்படி கனிமொழி தி.மு.க.வில் மிகவும் ஒடுக்கி ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் தடதடக்கின்றன. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வெளியே தெரியாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் இப்போது இந்த நாடாளுமன்ற பதவி பிரச்னைக்குப் பின் வெளியே தெரிய துவங்கிவிட்டதாம்.தனக்கான நீதி மறுக்கப்படுவதால் கனிமொழி தரப்பே இதை கவலையுடன் வெளியே சொல்ல துவங்கியுள்ளதாம். 

தனது அரசியல் மற்றும் பர்ஷனல் எதிர்காலம் குறித்துப் பெரும் கவலையுடன் இருக்கிறாராம் கனி. வயோதிகம் தொட்டுவிட்ட நிலையிலிருக்கும் ராசாத்தியம்மாள் கருணாநிதியின் மறைவுக்குப் பின்  மிகவே  நொடிந்துவிட்டார். ஒரே மகள் இவ்வளவு பெரிய அரசியல் அதிகார பின்னணியில் இருந்தும், திறமை இருந்தும் கூட இப்படி ஒடுக்கப்படுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். மகளின் கவலை பெரும் கவலையாய் அவரைப் படுத்துகிறதாம். கருணாநிதி ‘கனிம்மா’ என்று அழைத்த பாச மகளுக்கா இந்த கதி?