பிரிட்டனில் பிறழ்வு பெற்ற புதுவகை கொரோனா வைரஸ்  அந்நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாக உருவெடுத்துள்ளது. அது தெற்கு இங்கிலாந்து பகுதியில் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பழைய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்றும் அந்நாட்டின் பிரதமர் எச்சரித்துள்ளார். 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்து சமீபத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளித்து, அதை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இங்கிலாந்தில் வைரஸ் பிறழ்வு பெற்று அதாவது வளர்சிதை மாற்றம் அடைந்து புதிய வடிவத்தை எடுத்துள்ளது.

இதனால் கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு இந்த வைரசுக்கு எதிராக செயல்படும் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது என ரீடிங் பல்கலைக்கழகத்தின் செல்லுலார் நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் சைமன் கிளார்க் கூறியுள்ளார். தடுப்பூசி முழுமையாக கிடைக்கும் வரை புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கில் அமலில் இருக்கக்கூடும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் ஹான்காக் கூறியுள்ளார்.

இதன்காரணமாக தென்கிழக்கு இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் பல மாதங்களுக்கு நீட்டிக்க படலாம் எனவும், எனவே கிறிஸ்மஸ் பண்டிகையை ரத்து செய்துவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக  ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனுக்கான விமான சேவையை இன்று நள்ளிரவு வரும் முதல் 31ஆம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் புதியவகை கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையங்களில் போதிய கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கடந்த 10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.