எம்எல்ஏவை நம்பி முதுபெரும் தலைவர் தொடங்கிய தற்போதைய தலைவர் வரை பல நூறு கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிப்போய் இருக்கிறார்களாம்.

சென்னையில் அந்த முக்கியமான கட்சியின் முக்கியமான நிர்வாகியாக வலம் வந்தவர். எதையும் துணிச்சலாக பேசக்கூடியவர். முதுபெரும் தலைவர் இருந்த வரை கட்சியில் அவருக்கு சென்னையில் வலது கரமாக செயல்பட்டு வந்தவர். தலைவரின் செல்ல மகளுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி வந்த போதெல்லாம் நம்ம நிர்வாகி மூலமாகத்தான் தீர்த்து வைப்பார் அந்த முதுபெரும் தலைவர். மகளின் கவிதை ஆசை, கட்சி ஆசை, அரசியல் ஆசை என அனைத்திற்கும் சென்னை நிர்வாகி மூலமாகவே தூபம் போட்டு வந்தார் தலைவர். நமது நிர்வாகியும் தலைவர் சொல்லிவிட்டார் என்பதால் அப்போது செயல் தலைவராக இருந்தவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று கூட அஞ்சாமல் தொடர்ந்து தலைவரின் செல்ல மகளுக்கு அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுக் கொடுக்க உதவிக் கொண்டிருந்தார்.

இதனால் தான் முதுபெரும் தலைவர் இருக்கும் போதே கட்சியில் நிர்வாகியை சற்று ஒதுக்கியே வைத்திருந்தார் செயல் தலைவர். ஆனால் முதுபெரும் தலைவர் காலமான பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது. ஏனென்றால் தலைவரின் பல முக்கிய டிரான்ஸ்சாக்சன் எல்லாமே சென்னை நிர்வாகி மூலமாகவே நடந்துள்ளது அப்புறம் தான் புதிய தலைவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி தந்தை வழியில் புதிய தலைவரும் நம்ம சென்னை நிர்வாகி மூலமாகவே முக்கிய டிரான்சாக்சன்களை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கட்சி புதிதாக ஒரு நிறுவனத்துடன் செய்து கொண்ட கான்ட்ராக்படி செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் சென்னை நிர்வாகி வசமே ஒப்படைக்கப்பட்டது.

அவரும் தனது டிரான்சாக்சன் மூலமாகவே அந்த பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராதவிதமாக சென்னை நிர்வாகிக்கு திடீரென உடல் நிலை மோசமானது. மேலும் 15 நாட்களுக்கு முன்பு வரை திடகாத்திரமாக இருந்தவர் திடீரென இப்படி மருத்துவமனையில் சென்று படுத்ததும் தலைவர் பதறிவிட்டார். அதிலும் உடல் நிலை மோசம் என்றதும் தலைவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிறார்கள். ஏனென்றால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை செயல்படுத்தும் பொறுப்பே சென்னை நிர்வாகி மற்றும் சிலர் மூலமாகவே திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் முதுபெரும் தலைவர் காலந்தொட்டு நடைபெற்று வந்த டிரான்சாக்சன் என்பதால் பெரிய அளவில் சென்னை நிர்வாகி செலவுகளை ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் திடீரென நிர்வாகி மரணம் அடைந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறாராம் தலைவர். அவர் மட்டும் அல்ல இந்த விஷயங்களை ஒட்டு மொத்தமாக கோ ஆர்டினேட் செய்து வந்த மருமகனும் கூட கடந்த ஒரு வார காலமாகவே ஆடிப்போய் கிடக்கிறாராம். சரி வேறு ஒருவரை வைத்து மறுபடியும் முதலில் இருந்து கோ ஆர்டினேசனை ஸ்டார்ட் செய்துவிடலாம் என்று தலைவருக்கும், மருமகனுக்கும் மூத்த நிர்வாகிகள் ஆறுதல் கூறி வருகிறார்களாம்.

ஆனால், சரி அதை விடுங்கள் பல ஆண்டு கால டிரான்சாக்சன் மூலமாக கிடைத்த விட்டமின் ப எங்கெங்கு எப்படி முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதனை எப்படி தங்கள் பக்கம் திருப்பி விடுவது, இதற்கு யாரிடம் சென்று கணக்கு கேட்பது என்பது தான் எங்கள் கவலை என்று கூறி முகத்தை திருப்பிக் கொள்கிறார்களாம் இருவரும்.