கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது. நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதி சொல்லப்படும் ஆலோசனைகளை கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பார்க்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

" 5 கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்த பிறகும், நோய்ப்பரவல் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றால், இவர்கள் அமல்படுத்தியது பெயரளவுக்கான ஊரடங்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தமிழகத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 50 பேர் இறக்கிறார்கள். இப்படிநேர்ந்து வரும் இந்த பேரழிவை தமிழக அரசோ, தமிழக முதலமைச்சரோ எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னமும், கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம் என்று அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு செய்து கொண்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்த அறிவிப்புகளின் உண்மை தன்மையினை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, ‘இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?‘ என்று கேட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா? என்று வினோதமான வினா தொடுத்த முதலமைச்சர். தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவும் இல்லை. செய்யத்தெரியவில்லை. செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரசும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா? சாதாரண சளி, காய்ச்சலில் தான் 704 உயிரிழப்புகள் நடந்துள்ளதா? இன்னுமா? இந்த வைரசின் தாக்கம் குறித்து அறியவில்லை. வேறு உடல்நலக்குறைவு உள்ளவர்களை இந்த வைரஸ் தாக்கினால் உடனடி பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நல்ல ஆரோக்கியம் உள்ளவரை தாக்கினாலும், பாதிப்பு அதிகமாக இருக்கிறது. யாரையும் இத்தொற்று அதிகம் பாதிக்கும் என்பதே இன்றைய நிலைமை.

இதனை மறைத்து, சாதாரண காய்ச்சல், சளியோடு, இந்த வைரஸ் தொற்றை ஒப்பிடலாமா? கொரோனாவை மறைக்க முயற்சித்தார்கள். தடுப்பு நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு பரவிவிட்டதும், ‘இந்த நோயை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்‘ என்று முதல்-அமைச்சர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் பரவாமல் தடுக்கவாவது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றுதான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கத்தை நான் குற்றம் சொல்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்துக்கு மேல் குற்றம் அரசாங்கம் செய்வதால்தான், நான் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறேன். கொரோனாவை தடுத்திருக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்குதானே உண்டு.பரிசோதனை செய்தால் தொற்று உள்ளவர் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்பதால் பரிசோதனை செய்வதை குறைத்துக்கொண்டே போனதன் விளைவாகவே தற்போது இந்த தொற்று அதிகம் பரவியுள்ளது. சமூக பரவல் இல்லை என்று அரசு சொல்லி வருகிறது. சமூக பரவலாக ஆகிவிடக்கூடாது. ஆனால் சென்னையில் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேருக்கு யாரால் தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை என்கிறார்கள்.

இதுதானே சமூக பரவலுக்கான முதல் அறிகுறி. இதனை அரசு கவனித்ததா? கொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித்தருமே தவிர, கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது. நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதி சொல்லப்படும் ஆலோசனைகளை கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் பார்க்கிறார். இதனை அவர் தவிர்க்கவேண்டும்.மக்கள், மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்.