வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பணியில் பயன்படுத்த அதிமுக தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தீவிரமாக தேர்தல் பணியாற்றிவருகிறார். புதிய நீதிக் கட்சியினரை மட்டுமல்லாமல் அதிமுகவினரும் தேர்தல் வேலையில் பிஸியாக உள்ளனர். ஏ.சி. சண்முகம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்கூட்டியே அழைக்கப்பட்டுவிடுகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் கூட்டணி கட்சியினரை அழைத்து அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், வேலூரில் அதிமுக  - பாஜக கூட்டணியில் மட்டும் நல்ல புரிதல் இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாக வேலூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால், அந்தப் பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பிரசாரத்துக்கு அதிமுகவினர் அழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மோடி எதிர்ப்பு தமிழகத்தில் இருப்பதால், பாஜகவினரை பயன்படுத்த அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேட்பாளார் ஏ.சி. சண்முகம் விரும்புகிறார். அவருடைய விருப்பத்துக்கு மாறாக வேலூரில் பிரசாரத்துக்கு பாஜகவினரை அதிமுகவினர் கழற்றிவிடுவதால் ஏ.சி. சண்முகம் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை நன்றாக தேர்தல் செலவு செய்தும் தேர்தல் ரத்தால் எல்லாம் வீணாகிவிட்டது என்ற வருத்தத்தில் இருந்தார் ஏ.சி. சண்முகம். இந்த முறை கூட்டணி கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடக் கூடாது என்ற வருத்தத்தில் ஏ.சி. சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.