மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என குமரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் பிச்சை எடுப்பவன் காசு போட்டால் தர்மபத்தினி என்றும் கிடைக்கவில்லை என்றால் மூதேவி  என்றும் கூறுவான்.  அதனால் ஓட்டுக்காக அரசியல் கட்சியினரின்  குற்றச்சாட்டுக்கு பதில் கூற நான் விரும்பவில்லை என்றார். 8 வழிச்சாலைத் திட்டம் உறுதியான வளர்ச்சித் திட்டம் என்பதால் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 வழிச்சாலையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அப்படி அவர்கள் விரும்பும்போது அதை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை குஷ்பு விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும் என சுறியுள்ளார்.

 

ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள் என விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் நாளும் நமதே நாற்பதும் நமதே என்ற அடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.