வடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்த சம்பவம் பரபரப்பானது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஓலைக்குளத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 60. ஆடுகள் வளர்த்து வருகிறார்.08.10.2020 கண்மாய்க்குள், பலரின் ஆடுகள் மந்தையாக மேய்ந்து கொண்டிருந்தன. இதில், பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, சிவசங்கு என்பவரின் மந்தைக்குள் சென்றது.இதனால், ஆத்திரமுற்ற சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கினர்.  பால்ராஜை, சிவசங்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்தனர். இதை, சிவசங்குவின் உறவினர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினர்.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்ததோடு, அதை சமூக தளங்களில் பரப்பியுள்ளதாக, கயத்தார் போலீசில், பால்ராஜ் புகார் அளித்தார். போலீசார், சிவசங்கு, 60, அவரது மகள் உடையம்மாள், 33, மற்றும், 19 - 47 வயதுள்ள ஆறு ஆண்கள் என, எட்டு பேர் மீது, வன்கொடுமை உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். எஸ்.பி., ஜெயகுமார்  ஓலைக்குளம் சென்று, புகார் அளித்த பால்ராஜிடம் விசாரித்தார்.தற்போது அவரது வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.