தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் 8 தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே எடப்பாடி அரசு தப்பிக்கு முடியும். இல்லை என்றால் கவிழும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இந்த தேர்தல் குறித்து உளவுத்துறை அளித்த  ரிப்போர்ட்டில் திமுக 10 தொகுதிகளில் கட்டாயம் ஜெயிக்கும் என்றும் அமமுக 5 முதல் 6 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளுக்குள் ஜெயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி எப்படியாவது குறைந்தது 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முக்கியமான 8 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த தொகுதிகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம் என  அனுமதி வழங்கியுள்ளார்.

மொத்தமாக 20 தொகுதிகளிலும் 500 சி வரை செலவு செய்ய அதிமுக தயாராக இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதையடுத்து எடப்பாடி சொன்னதுதான் அதிமுக நிர்வாகிகளை அசர வைத்துள்ளது. அதாவது 8 தொகுதிகள் நம் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தேவை. எனவே அதை உறுதி செய்து கொள்ளுங்கள். மற்ற தொகுதிகளில் திமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் மட்டும் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே திமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை, அதிமுக ஜெயித்துவிடக்கூடாது என தினகரனில் ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அதே எண்ணத்தில் அதிமுகவும் உள்ளது. இது திமுகவுக்கு  சாதகமாகுமா ? ஆட்சி நிலைக்குமா ? அதிமுகவை தினகரன் கைப்பற்றுவாரா ? இப்படி பல கேள்விகளுக்கு 20 சட்டமன்ற தொகுதி தேர்தல்தான் விடை சொல்லும்.