70 new sand mines will be opened shortly sand mafia should be punished

 தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது, தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்தும், மணல் அதிக விலைக்கு விற்பனை ஆவது குறித்தும் பேசப்பட்டது. இதை அடுத்து, மணல் குவாரிகளை அதிகரித்து, மணல் தட்டுப்பாட்டைப் போக்க முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் புதிதாக 70 மணல் குவாரிகளைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மணல் குவாரிகளை புதிதாகத் திறப்பதற்கு அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் முத்தரசன் இது குறித்துப் பேசியபோது, தமிழகத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு எல்லாம் மணல் அள்ளப்பட்டு, வறண்டு போய் விட்டன. இனியும் இவற்றில் மணல் அள்ளினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என்று எச்சரித்தார். 

தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே நிர்வகித்து நேரடியாக மணல் விற்பனை செய்யப்படுகிறது. மணல் மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருந்து, மணல் குவாரிகளை அரசே மீட்டெடுக்க கடும் முயற்சி செய்து தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தது. இருப்பினும், இப்போது மீண்டும் மணல் மாபியாக்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில், பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி என ஆற்றுப் படுகைகளில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதாகக் கூறி, ஆற்றையே சுரண்டுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. எனினும் மணல் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி 30 இடங்களில் குவாரிகள் துவங்க மாநில சுற்றுச் சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அரசு அனுமதி கோரியது. 

இதன் பின், பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் விழுப்புரம், கடலூர், வேலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 8 மணல் குவாரிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, அனுமதி கிடைத்தது. அதன் பின் மணல் வினியோகிக்கும் முறையில் நேரடி குவாரிகள் என திறக்கப்பட்டன. ஒவ்வொரு குவாரியிலும் 150 லோடு மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறதாம். இருப்பினும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மணல் தேவையை நிறைவேற்றவில்லை. 

இந்நிலையில், வெளிச் சந்தையில் ஒரு லோடு மணலுக்கு ரூ.13 ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில், திடீரென அதிரடியாக ரூ. 30 ஆயிரத்துக்கு லோடு மணல் விற்பனை ஆனது. இதனால் மணல் தேவையைக் கருதி, சட்ட விரோதமாக பல இடங்களில் உயர் நீதிமன்ற தடையையும் மீறி, மணல் குவாரிகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. 

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 8 குவாரிகளில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தாலும் கூட, ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்களின் தலையீட்டால் உள்ளூர்க்காரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

குவாரிகள் அதிகரிக்கப் படாததால், சூழ்நிலையைப் பயன்படுத்தி மணல் மாபியாக்கள் அட்டகாசம் செய்யத் துவங்கின. நீதிமன்றங்களின் தடையால் மூடப்பட்ட 14 குவாரிகளில் மீண்டும் மணல் கொள்ளையைத் துவக்கி, நாள் தோறும் சுமார் 200 லோடுகள் வரை வெளியேற்றப்பட்டன. இவ்வாறு அனைத்து குவாரிகளிலும் சேர்ந்து, சுமார் 3000 லோடுகள் வரை போலி ரசீதுகள் மூலம் அதிக விலைக்கு மணல் விற்கப்பட்டதாம். 

காவல் துறையினரும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும், சில லாரிகளை மட்டும் கைப்பற்றியதாகக் கணக்கு காட்டிவிட்டு, முறைகேடான வகையில் போதிய வருவாய் கிடைத்துவிடுவதால், கண்டும் காணாமல் இருந்துவிடுவதாக புகார் எழுந்தன. \

இந்நிலையில், கூடுதல் மணல் குவாரிகள் திறகப்படவுள்ளன. ஆனால், இதற்கும் தற்போது எதிர்ப்பு எழுந்து வருகிறது. இருப்பினும், வெளிநாட்டு மணல் குறைவான விலையில் இறக்குமதி செய்து பயன்படுத்த அரசு ஆவன செய்து, சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. தமிழக ஆறுகள் மணல் இல்லாமல் மலடாகிக் கொண்டிருக்கும் நிலையில், கூடுதல் குவாரிகள் என்பதை விட, கேரளத்தைப் போல் மணல் இறக்குமதிக்கு அனுமதித்து, மணல் கொள்ளையர்களுக்குத் துணைபோகாமல் அரசு இருக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை.