முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை என்று ராகுல்காந்தி மனம் திறந்துள்ளார். 

மக்களவை தேர்தலை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்தும், இலங்கை பிரச்சனை குறித்தும் பேசினார்.

எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்னை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை என்றும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். 

இலங்கை படுகொலை விஷயத்திற்காக காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார். மேலும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.