அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை போயஸ் கார்டனில் தொடங்கியது. அதில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த ஒ.பி.எஸ்., தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதத்தை வாசித்தார்.

பின்னர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக அனைத்து எம்எல்ஏக்களும்தேர்ந்தெடுத்தனர்.

மேலும், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து வரும் 7 அல்லது 9ம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்பார்.

இதற்கிடையில், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். அப்போது சசிகலா, அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதாக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடித்ததை, கவர்னரிடம் கொடுப்பார் என தெரிகிறது.

அதை தொடர்ந்து கவர்னர், வரும் 7 அல்லது 9ம் தேதி முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என அதிகரப்பூர்வ வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா, முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், புதிய அமைச்சர்களின் மாற்றம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காகவே 8ம் தேதி வரவேண்டிய கவர்னர், நாளை காலை சென்னை வருகிறார் எனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

முதலமைச்சராக பதவியேற்கும் சசிகலா 6 மாதத்தில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும். இதற்காக கவர்னர் அலுவலகத்தில் இருந்து, காலியாக உள்ள தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்படும். அதை தொடர்ந்து சசிகலா போட்டியிடும் தொகுதியை தேர்ந்தெடுப்பார்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தற்போது காலியாக உள்ளது. ஆனால், அங்கு சசிகலா போட்டியிடுவது சந்தேகமே. இதனால், ஆண்டிப்பட்டி அல்லது திருமங்கலத்தில் அவர் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.