இரட்டை இலைச் சின்னத்திற்காக சுமார் 60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற்றே தீர வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டியவர் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்.

சின்னம் யாருக்கு என்ற மில்லியன் டாலர் கேள்வியை பத்து பைசாவுக்கு போகாதபடி சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியது. தினகரனுக்கு தொப்பியையும், ஓ.பி.எஸ்.சுக்கு இரட்டை மின்விளக்கும் அளிக்கப்பட்டன.

இதற்கிடையே சின்னத்தைப் பெற சதீஷ் சந்திரா என்ற முகவருக்கு டிடிவி தினகரன் 1 கோடி 30 லட்சம் ரூபாய் லஞ்சம் அளித்ததாக அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இரட்டை இலைக்காக 60 கோடி பேரம் பேசப்பட்டதாவும், முதற்கட்டமாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் சதீஷ் சந்திராவிடம் அளிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விசயமறிந்தவர்கள். கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை டிடிவி தினகரன் விவகாரத்தில் சாலப் பொருந்தியுள்ளது.