மஹாராஷ்டிராவில் பாஜக - , சிவசேனா கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா கட்சி மிக மும்முரமாக இறங்கி பிரசாரம் செய்தது. மேலும் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே முதன்முறையாக போட்டியிட்டார்.

தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், சிவசேனா 50க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியில் அமர்கிறது. இந்த முறை ஆட்சியில் சிவசேனா பங்கு கேட்டுள்ளது. இதனால் இந்த கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது,  மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளனர். மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும் 50க்கு 50 என பிரித்து கொள்வது என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தவுள்ளோம். அமித்ஷாவுடனும் பேச்சு நடத்துவோம். பின்னர் யார் முதல்வராக அமர்வது என்பது குறித்தும் முடிவு செய்வோம். போதிய அளவு அதிகாரத்தில் இடம்பெறுவோம் என்று உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேசப்படுகிறதா என்ற கேள்வி தவறானது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஏற்கனவே சிவசேனாவுடன் என்ன பேசப்பட்டதோ அவ்வாறு நடக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும் என கூறினார்.