தேனி மக்களவைத் தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ரவீந்திரநாத்குமார் தரப்பில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இருந்தபோதும் எந்தவித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படலாம் என எதிர்கட்சிகள் சந்தேகமடைந்துள்ள சூழலில், திடீரென, 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பது.

இதனை அறிந்த காங்கிரஸ், தி.மு.க., கம்யூயுனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், சில இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டால், அதற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன என்கின்றனர். 

இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சி நிர்வாகிகள், தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராடினர். சம்பவம் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, எதிர்க்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத 50 இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியுள்ளோம் என்று வருவாய் அலுவலர் விளக்கம் அளித்தார்.

இது குறித்து  விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ   , பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூம் எனப்படும் அறையில் பாதுகாப்பாக உள்ளன. பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். 

தேவை கருதியே தேனிக்கும் ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கை தான். மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என்றார். ஆனால் தேனி தொகுதியைப் பொறுத்தவரை மறு வாக்குப்பதிவு  நடத்த வேண்டிய இடங்கள் எதுவும் இல்லை என்பதால் எதற்காக இந்த 50 எந்திரங்கள் என திமுக தொண்டர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.