Asianet News TamilAsianet News Tamil

50 நாட்கள் வனவாசம் முடிந்து விட்டதா? மிஸ்டர் மோடி....

50 days-finished-mrmodiji
Author
First Published Dec 31, 2016, 11:30 AM IST


“50  நாட்கள் அவகாசம் கொடுங்கள்; டிசம்பர் 30-ந்தேதிக்குள் கருப்பு பணம், ஊழல் அனைத்தையும் ஒழித்துக் காட்டுகிறேன். நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால், பிரச்சினை தீராவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்''

இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 13-ந்தேதி கோவாவில் மக்களுக்கு கூறிய செய்தி. அந்த 50 நாட்கள் நேற்றுடன் முடிந்தது.

தூய்மையான இந்தியா மலர்ந்துவிட்டது; நாட்டில் இருந்து ஊழல், கள்ளநோட்டு, கருப்பு பணம் துடைத்து எறியப்பட்டுவிட்டது; இந்தியா வல்லரசு ஆகிவிட்டது; ஏழைகளும், நடுத்தர மக்களும் இனி அரசு அலுவலங்களில் லஞ்சம் இன்றி தங்களின் சேவைகளை பெறமுடியும் ,  50 நாட்கள் அனுபவித்த  சிறிய  துன்பத்தினால் பெரிய அளவில் அனுபவித்த துன்பத்துக்கு பலன் கிடைத்து விட்டது.

இப்படி எல்லாம் நீங்கள் நம்பிக்கொண்டு இருந்தால் . ஏதோ வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றுத்தான் உங்களை நினைக்க தோன்றும்.

“சூரியவம்சம்” படத்தில் “நட்சத்திர ஜன்னலில்” பாட்டு முடிவதற்குள் சாதாரண சரத்குமார், தொழிலதிபர் ஆகிவிடுவார், தேவயானி கலெக்டர் ஆகிவிடுவார். இதுபோன்ற கண்மூடி திறப்பதற்குள் நடக்கும் சம்பவங்கள் சினிமாவுக்கு சந்தோஷம் தரும். ஆனால், நடைமுறையில் சாத்தியமாகுமா?

 ஆண்டாண்டு காலமாக நம்நாட்டில் புற்று நோயாக வளர்ந்துள்ள ஊழல், ஏமாற்றுத் தனம், கள்ளநோட்டு, கருப்பு பணம், பதுக்கல் போன்ற வளர்ச்சியை சீர்குலைக்கும் புல்லுருவிகளை 50 நாட்களில் அகற்றுவது என்பது சாத்தியமானதா?

 ‘மோடி வித்தை’காரர்களுக்கு வித்தை மட்டும்தான் காட்டத் தெரியும். நன்மை செய்யத் தெரியாது. அதைத்தான் நமது பிரதமர் மோடி கடந்த 50 நாட்களுக்கு முன் தனது அறிவிப்பின் மூலம் 130 கோடி மக்களுக்கும் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டையும் ஒழிக்கப்போகிறேன் என வித்தை காட்டி வருகிறார்.

“அச்சே தின் ஆனே வாலே ஹெய்” அதாவது “நல்ல காலம் பொறக்குது” இது தான் தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் மந்திர வார்த்தையாக நாடெங்கும் ஒலித்தது. 

கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு உயர்மதிப்பு கொண்ட ரூபாய் மதிப்பிழத்தல் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடும் போது இந்த வார்த்தைதான் மாயத்தோற்றமாக அனைவரின் கண்முன் நிழலாடியது. எல்லோரும் கொண்டாடினர்.

கடந்த நவம்பர் 8-ந்தேதி இரவு 8 மணிக்கு டி.வி.யில் தோன்றி  130 கோடி மக்களையும் பதற்றத்தில் உறைய வைக்கும் வகையில்,  ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாத, முறையாக திட்டமிடாத, மாற்று ஏற்பாடுகளைச் செய்யாத இந்த அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மக்களின் இயல்புவாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போடும் என யாரும் அப்போது  எதிர்பார்க்கவில்லை.

ஏன் இதை பிரதமரே எதிர்பார்த்து இருக்கமாட்டார்!. இந்த அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் பொருளாதாரத்தில் இப்படி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தப்போகிறது என அவருக்கே அப்போது தெரிந்து இருக்காது.

பிரதமர் மோடி தனது அறிவிப்பின் மூலம் ஏதோ பெரிதாக ஏதோ பண்ணப்போகிறார் என்று மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். ஆனால், கடைசியில் அவர் மக்களைத்தான் ‘சம்ஹாரம்’ பண்ணி இருக்கிறார்.

நாட்டின் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒரே நாள் இரவில் செல்லாது என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டால்,  மக்கள் செலவுக்கு எங்கே செல்வார்கள்?. 

அது மட்டுமா, டிசம்பர் 30 ந் தேதிக்குள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து விடுங்கள் என்ற அறிவிப்பும் வெளியானது.

அன்றாடச்செலவுக்கு வீடுகளிலும் டப்பாக்களிலும், அரிசி குண்டாக்களிலும் ரூ.500, ரூ1000  சேர்த்து வைத்து இருந்த நம் வீட்டு பெண்கள் அல்லாடிப் போனார்கள். 

அடுத்த நாள் வங்கியில் டெபாசிட் செய்யப் போனால், திரைப்பட  ரிலீஸ் காட்சியின் போது நிற்கும் கூட்டத்தை வங்கியின் வாசலில் பார்க்க முடிந்தது.

ரொக்கத்தை வைத்து தினந்தோறும் பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகள் , விவசாயிகள் , கிராம வணிகம் முற்றிலும் முடங்கி போனது.

அதன் பின் நாள்தோறும் மக்களை குழப்பும் வகையில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல், உத்தரவுகளை பிறப்பிப்பதும், மாற்றி அறிவிப்பதுமாக இருந்தனர்.

சாமானியர் ஒவ்வொருவரும் குருவி சேர்த்தார் போல் சிறுகச் சிறுக  வங்கியில் சேமித்த பணத்தைக் கூட அவசரத்துக்கு எடுக்க விடாமல் உத்தரவுகள் பறந்தன. நாள் ஒன்றுக்கு ஏ.டி.எம். களில் ரூ.  ரூ. 2,500 , வங்கியில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் என ரேஷன் வைக்கப்பட்டது.

கூலி வேலைக்கு செல்பவர் முதல் கார்ப்பரேட் வேலைக்கு செல்பவர் வரை ஏ.டி.எம்.மையத்திலும், வங்கியிலும் நின்று பணம் எடுப்பது வேலையாக மாறியது. பலதரப்பட்ட மக்கள் வேலை இழந்தனர், தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு செய்தன,

சிறுவியாபாரி முதல், நடைபாதை வியாபாரிகள்வரை நசிந்தார்கள். மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றனர். கால் கடுக்க வங்கி முன் நின்றதிலும், மன அழுத்தத்திலும், 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரை இழந்தனர்.

இதை யாராவது, விமர்சித்தால், நாட்டுக்காக இதைக்கூட செய்யமாட்டீர்களா?, ராணுவவீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள் உங்களால் நிற்க முடியாதா? என தேசதுரோகி  பட்டம் கிடைத்தது.

 திருமணம் முதல் அவசரச் செலவுக்கு கூட வங்கியில் இருந்து சேமிப்பை எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடினர். நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் நோட்டை பார்ப்பதே அரிதாக இருந்தது

நிலைமை இப்படி இருக்க,  கர்நாடகாவில் பா.ஜனதா முன்னாள் அமைச்சர் ஒருவர்  600 கோடியில் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்தார், மஹாராஷ்டிராவில் அமைச்சர்களின் காரில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டது, எல்லையில் ராணுவ வீரர் பற்றி போலி தேசியம் பேசியவர்கள் கத்தை கத்தையாக கருப்பு பணத்துடன் பிடிபட்டனர்.

 சேகர் ரெட்டி போன்ற பெரும் பணமுதலைகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில், கத்தை கத்தையாக  நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் சிக்கின.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வந்த பின் நாட்டில் சாமானிய மக்களையும், நடுத்தர மக்களையும் தவிர்த்து எந்த அரசியல்வாதியும், மத்திய, மாநில அமைச்சர்களும், எம்.பி. எம்.எல்.ஏ.களும், பணக்காரர்களும் வங்கி முன் வரிசையில் நிற்கவில்லை.

 இவர்களுக்கெல்லாம் எல்லாம் பணத்தேவை இருக்காதா?, செலவுக்கு  எங்கே செல்வார்கள்? என்ற கேள்விகளுக்கு பதிலில்லை.

இந்த சம்பவங்களைப் பார்த்தபின் தான். கருப்பு பணத்துக்கு எதிராக ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தவில்லை மோடி, சமானியர்கள் மீது நடத்தி இருக்கிறார் என்று மக்களுக்கு உறைக்கத் தொடங்கியது.

இந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் மூலம் நாளுக்கு நாள் சிக்கலும், பிரச்சினையும் அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது. 

ஏ.டிஎம்.கள் நிரந்தரமாக அடைக்கப்பட்டன. பணத்தட்டுப்பாடு தலை விரித்தாடியது. அப்போதாவது , அறிவிப்பை வாபஸ் பெறுவார் மோடி என எதிர்பார்த்தனர்.ஹூம் ஒரு அசைவு கூட இல்லை.

 கருப்புபணம், பயங்கரவாத தடுப்பு, கள்ளநோட்டு என பிரதமர் மோடி கூறிய எதுவும் கட்டுப்பாட்டுக்குள் வந்த மாதிரி தெரியவில்லை. வரவே இல்லை.

ஏனென்றால் புழக்கத்தில் இரந்த ரூ.15.40 லட்சம் கோடியில், ஏறக்குறைய ரூ.12 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துவிடும், மீதமுள்ளவை கருப்புபணமாக அதாவது ரூ.3 லட்சம் கோடி தங்கிவிடும் என மத்திய அரசு கணக்குப் போட்டது. 

ஆனால், நடந்ததே வேறு, கடந்த 4 நாட்களுக்கு முன் நிலவரப்படி 90 சதவீத செல்லாத ரூபாய் வங்கிக்கு திரும்பிவிட்டது என ரிசர்வ் வங்கி கூறியது.

அப்படியானால், கருப்புபணம் எங்கே? , கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்று முழுக்கமிட்ட மோடியின் பேச்சு வீண்தானா?, 50 நாட்கள் மக்களை காரணமில்லாமல்தான் வாட்டி எடுத்தாரா?, அல்லது பெரும் பணக்காரர்களின் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற உதவினாரா? என சந்தேகம் நியாயமாக  மக்கள் மனதில் எழுந்தது.

கடந்த 50 நாட்கள் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், தங்கம் என்ற வகையில், ரூ.4,172 கோடிமட்டுமே சிக்கின. இதில் ரூ.105 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள்.

ஆக, 50 நாட்களில் கருப்புபணம் என்பது வெறும் ரூ.4,172 கோடிதான் என்று வருமானத்துறை மூலம் சொல்லாமல் சொல்லிவிட்டது மோடி அரசு.

ரிசர்வ் வங்கியோ 5.45 லட்சம் கோடி வங்கிகளுக்கு கொடுத்து இருக்கிறோம், தொடர்ந்து 4 அச்சகங்களில் இரவுபகலாக ரூபாய் அச்சிடும் பணிநடக்கிறது. விரைவில் நிலைமை இயல்புக்கு திரும்பும் என்கிறது.

வந்தது 14 லட்சம் கோடி வரை ஆனால் திரும்ப புழக்கத்தில் விட்டதோ வெறும் ஐதே முக்காள் லட்சம் கோடி மட்டுமே.

சாதாரண பெட்டிக்கடைக்காரர் கூட 500 ரூபாய் நோட்டை முடக்காமல் இருந்திருந்தால் பொதுமக்கள் இவ்வளவு துன்பத்திறு ஆளாவார்களா? அட அது கூட வேண்டாம் 2000 ரூபாய் கரன்சிகளுக்கு பதில் முதலில் 500 ரூபாய் கரன்சிகளை இறக்கியிருந்தால் இவ்வளவு துன்பபம் வருமா என்று கேட்கிறார்.

இது கூடவா தெரியவில்லை இந்த பொருளாதார மேதைகளுக்கு என்று கேட்கலாம். தெரியும் நன்றாக தெரியும். உங்களை பேடிஎம் , அமேசான், ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளுக்குள் கொண்டு வரவும் உங்கள் வர்த்தகத்தை முடக்கவும் பணமில்லா பரிவர்த்தனை பற்றி பேசுபவார்கள் எப்படி கொண்டுவருவார்கள் முதலில் 500 ரூபாய் கரன்சியை. 

 ரூ.15.40 லட்சத்தை புழக்கத்தில் இருந்து ரத்து செய்து விட்டு, அதில் நான்கில் ஒருபகுதியை மட்டும் வங்கி முறைக்கு கொண்டுவந்தால் பணத்தட்டுப்பாடு தீருமா?.

இப்படி எதுவுமே திட்டமிடாமல் செய்து ரூபாய் நோட்டுதடை அறிவிப்பு என்பது தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியது.

உடனே சுதாரித்த மோடி,  ஒரு ‘யூ டர்ன்’ அடித்து, கள்ள பண ஒழிப்பில் இருந்து, ‘காசு இல்லா பொருளாதாரத்துக்கு மாறுங்கள்’ என மக்களை குழப்பினார்.

இயல்பு வாழ்க்கையில் இருந்து கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று தெரிந்திருந்தும், அந்த முயற்சியை மோடி தொட்டு இருந்தார். மோடியின் முயற்சி பிழையானது என பொருளாதார வல்லுநர்களும், நிபுனர்களும் எச்சரிக்கையும், ஆலோசனையும் கூறினர்.

ஆனால், என்ன செய்ய? மோடி புலிவாலை பிடித்து விட்டாரே?, விடமுடியாமல், பணமில்லா பொருளாதாரரத்துக்கு தாவினார். காசில்லா பொருளாதாரம் எனும் கனவைத் துரத்த தொடங்கினார்.

அனைத்து மக்களும்  டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள், கார்டுகள், இ-வாலட் மூலம் பரிமாற்றம் செய்யுங்கள் என அடுத்த உத்தரவுகள், சலுகைகள் வரத் தொடங்கின.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 90 சதவீதம் காகிதப் பணம் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 சதவீத கிராமங்களுக்கு இன்னும் ஏ.டி.எம். வசதியில்லை. 30 சதவீதம் பேர் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு இன்னும் ஏ.டி.எம். பின் நம்பரை பேப்பரில் எழுதி வைத்துதான் பணம் எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சூழலில், டிஜிட்டல் பரிமாற்றத்தையும், பணமில்லாப் பொருளாதாரத்தையும் நோக்கி நாட்டையும் மக்களை கட்டாயப்படுத்தி நகர்த்தி வருகிறார் மோடி. 

ஸ்கான்டிநேவியன் நாடுகளைப் போல் எப்போது இந்தியா மாறுவது, நார்வே நாட்டில் 6 சதவீதம் பேர் மட்டும்தான் காகிதப்பணத்தை பயன்படுத்துகிறார்கள். நாமும் அதுபோல் மாற வேண்டும் என பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் பீரங்கிகள் மக்களிடம் முழக்கமிட்டனர்.

நார்வே, பின்லாந்து நாடுகள் போல, வலிமையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து இருந்தால், இதுபோன்ற பணமில்லா பொருளாதார துரத்திப்பிடிக்க முடியும். ஆனால், நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின் இணைப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளே இல்லாத போது இது சாத்தியமாகுமா?

இன்னும் தலைக்கு மேல் செல்லும் மின்கம்பிகளை வைத்துதான் மின்சாரம் இணைப்பு கொடுத்து வருகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணமில்லா பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான மின்சாரம், தொலைத்தொடர்பு என்பதை வர்தா புயல் சமீபத்தில் நமக்கு உணர்த்திவிட்டுச் சென்றது.

இப்படிப்பட்ட சூழலில்  50 நாட்கள் முடிந்து  மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி நாளை உரையாற்றப்போகிறார். மக்கள் அனுபவித்த வேதனைகளுக்கு தீர்வு சொல்வாரா? அல்லது இன்னும் கொஞ்சம் நாள் வனவாசம் செல்லுங்கள் என மக்களிடம் கேட்கப்போகிறாரா? பொறுத்து இருந்து பார்ப்போம். - போத்திராஜ் 

Follow Us:
Download App:
  • android
  • ios