டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இந்த இடைத் தேர்தல்களில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஒரு வேளை இடைத் தேர்தலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது. அதற்குத்தான் எடப்பாடி சூப்பர் பிளான் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்றநிலையில் 18 பேர் தவிர தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவர் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏ.,க்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தாலும் மீண்டும் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் திமுகவின்  ஆட்சி கனவு நிறைவேறாமல் போய்விடும்.

தற்போதைய நிலவரப்படி அதிமுகவிற்கு 114 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி - ரத்தினசபாபதி விருத்தாசலம் - கலைச்செல்வன் கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ளனர். 

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு எதிரான நிலையை எடுத்தனர். இவர்கள் ஐந்து பேரும் அதிமுக  தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை. இரட்டை இலையில் வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு மட்டும் தற்போது அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாக உள்ளார்.

தற்போது அதிருப்தி எம்எல்ஏக்களை தவிர்த்தால் 109 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். 

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏ கிடைத்து விட்டால் அவர்கள் தயவு தேவை இல்லை. 

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு வேலை செய்த ஆதாரங்கள் அடிப்படையில் ஐந்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

அவ்வாறு ஐந்து பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 229 ஆக குறையும். அப்போது ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வுக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதும். அப்படி பார்த்தால் 22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்தது ஆறு இடங்களில் வென்றாலே போதும். தற்போதைய சூழ்நிலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எளிதாக வென்று விடலாம் என அ.தி.மு.க. தலைமை கணக்கிட்டுள்ளது.

எனவே தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரின் பதவிக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி. அவர்கள் அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாகப் போனால் அவர்கள் பதவி நீடிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க.விற்கு இடைத்தேர்தலில் நான்கு இடங்கள் கிடைத்தாலே போதுமானது.

இதை உணர்ந்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழக்க விரும்பாமல் அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாகச் செல்லவே வாய்ப்பு அதிகம். இல்லையெனில் மீண்டும் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். அதேநேரத்தில் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் 22 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று விட்டால் அதன் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்து விடும். அப்படியொரு நிலைமை ஏற்படுமா என்பது கேள்விக்குறி என்பதால் தி.மு.க. வின் ஆட்சி கனவு பலிப்பதற்கு உடனடி வாய்ப்புகள் எதுவும் இல்லை.