35 வயதைத் தாண்டியவர்களுக்கு  திமுக இளைஞரணியில் இடமில்லை என்று  கூறும் உதயநிதிக்கு தற்போது வயது 41 ஆகிறது.உபதேசங்களும், விதிமுறைகளும் திமுகவில் தொண்டர்களுக்கு மட்டும்தானா..? என கேள்வி எழுப்பி  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார். 

திமுக இளைஞரணிச் செயலாளரான புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் நேற்று  திமுக இளைஞர் அணிக்கூட்டம்  நடைபெற்றுது, அதில் திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மொத்தம் 12  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதில் இரண்டு தீர்மானங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, திமுகவில் இளைஞர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, மற்றும் இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆகும்.. இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், 

வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள்ளான அதாவது  அடுத்த 2 மாதங்களுக்குள்ளாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சுமார் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை திமுகவில் உறுப்பினர்களாகச் இணைக்க வேண்டும் என்றார்.  அதைத்தொடர்ந்து  இதுவரை 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்ற உதயநிதி,  

உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டைகள் உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என்றும் அப்போது கூறினார். இளைஞரணியில் 35 வயது கடந்தவர்கள் இருக்க முடியாது என தெரிவித்துள்ள உதயநதிக்கு இப்போது வயது 41 என்றும், திமுகவில் விதிமுறைகளும், உபதேசங்களும் தொண்டர்களுக்கு மட்டும்தானா? தலைவர்களுக்கு இல்லையா? என கேள்வி எழுப்பி எச். ராஜா உதய நிதியை கலாய்த்து வருகிறார்.