கடந்த 2014   நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் திமுகவுக்கு போய்விடாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக  கட்சிகள் பிரித்துக் கொண்டன . இதனால் அதிமுக ஈஸியாக ஜெயிக்க முடிந்தது.  40 ற்கு 38 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திமுகவும் படுதோல்வி அடைந்தது.

அதே போல் இந்தத் தேர்தலிலும் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்காக மூன்றாவது அணியை உருவாக்க மத்திய அமைச்சர் ஒருவர் முழுவீச்சில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

அவரது திட்டப்படி தற்போது திமுகவில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் உரசல் தொடங்கிவிட்டது.  மேலும் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த பாமக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

இப்படி திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் வேலைகள் கனகச்சிதமாக நடைபெற்று வருகிறது.  இப்படி பிரச்சனைகளால் வெளியேறும் கட்சிகள் அனைத்தும் தஞ்சமடையப் போவது என்னவோ அமமுகதான்.

இதையடுத்து அமமுகவுடன், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மக்கள் நீதி மய்யம்( இது தனியாகவும் போட்டியிடலாம்), சமத்துவ மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.. இப்படி ஒரு  மூன்றாவது அணி அமைந்தால் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் திமுக அணிக்கு போகாமல் பிரிந்து மூன்றாவது அணிக்கு போய்விடும் என்பதுதான் மத்திய அமைச்சரின் மெகா பிளான்.

இது நடந்தால் திமுகவின் வெற்றி என்பது சாத்தியமில்லாமல் போகும். இப்படி ஒரு பிளான் ஒர்க்அவுட் ஆகுமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.