கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று திரும்பிய நிலையில் அம்மாணவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்தியாவிலும்  இந்த வைரஸ் பரவி வருகிறது .  இந்நிலையில் திருச்சி  புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில்,  கொரோனா நோய் பாதித்தவருகளுக்கு  சிகிச்சைக்காக சிறப்பு வார்டு  ஏற்படுத்தப்பட்டுள்ளது .  இந்நிலையில்  திருச்சியில்  விமான நிலையம் உள்ளதால் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர் . 

அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ,  அதாவது,   சளி ,  இருமல் ,  மூச்சுத் திணறல் ,  இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் .  கடந்த 30 நாட்களில் 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வீடு  திரும்பியுள்ளனர் .  இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆருகே உள்ள பரம்பூர் என கிராமத்தை சேர்ந்த ஈஷா அனிபா என்ற இரண்டு வயது  குழந்தை சளி காய்ச்சல் தொற்று அறிகுறியுடன்  சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது,   குழந்தைக்கு ரத்தம்  மற்றும்  சளி பரிசோதனை செய்யப்பட்டதில்  குழந்தைக்கு கொரோனா இல்லை  என்பது தெரியவந்தது , அதனையடுத்து குழந்தை  பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. 

 

இதற்கிடையே புளியம்பட்டி சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இந்நிலையில் நேற்று திருச்சி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் சளி ,  காய்ச்சல்  அறிகுறியுடன் மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார் .  தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று வீடு திரும்பிய போது அவருக்கு  காய்ச்சல் ஏற்பட்டதால் ,  கல்லூரி விடுதியில் இருந்து உடனே  அவர் மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்.  திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்யும் சுங்க இலாகா உதவி ஆணையர் ஒருவருக்கும் கொரோனா நோய் அறிகுறி தென்பட்டதால்  அவரும்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .   கேரளா சென்று திரும்பிய மாணவர்  உட்பட 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.