மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்ந நெருக்கடியான நிலையில் சர்வதேச நாணய நிதியம் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது.  3 புதிய வேளாண் சட்டங்களும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும் எனவும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை ஐ.எம்.ஏ வரவேற்றுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆவர்களுக்கு ஆதரவான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் டெல்லி போராட்டம்  51 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரை விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதில்லை என மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. அதேபோல் சட்டம்  திரும்பப் பெறப்படும் வரை தங்கள் போராட்டம் முடிவுக்கு வராது என்று விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.  இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதுடன்,  மேலும் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது. 

இந்த குழுவில் உள்ள நான்கு பேரும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவானவர்கள். எனவே இந்த குழு முன் ஆஜராக மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காசியாப்பூர் எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி இரு தரப்பிலும் முடிவு எட்டப்படாமல் போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி பெரிதும் உதவும். 

அதே நேரத்தில் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் சர்வதேச நாணயத்தின் கூற்றுப்படி, புதிய விவசாய சட்டங்கள் விவசாயத்தை சீர்த் திருத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த சட்டத்தின் விளைவாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்க முடியும், இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளின் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும். என்று அவர் கூறியுள்ளார். விவசாயிகளுக்கும்  மத்திய அரசிற்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவு பெறாமல் நீடிப்பதுடன், போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மதிப்புமிக்க சர்வதேச அமைப்பிடம் இருந்து நம்பிக்கையூட்டும் கருத்துக்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.