அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றுக் கொள்ளும் நிலையில் அவருக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

அமமுக கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ’’டி.டி.வி.தினகரன் கட்சியின் பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டார். கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார். 

அதிமுக, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்வார்’  என்றும் அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் சி.ஆா்.சரஸ்வதி தெரிவித்தார். ஏற்கெனவே அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதர்வாக வந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறினால் அதிமுக மீது டி.டி.வி.தினகரன் எந்த உரிமையும் கோர முடியாது.

 

அவர்களுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதி கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி பிரபு ஆகியோரது பதவி பறிபோகும் நிலை உருவாகலாம். இந்த மூவரும் டி.டி.வி.தினகரன் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் பதவி பறிபோகும் எனக் கூறப்படுகிறது.