தமிழக சபாநாயகர் தனபாலிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஓரிரு நாட்களில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்து வருகின்றனர். இவர்கள் அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அரசு கொறடா ராஜேந்திரன்,  சபாநாயகர் தனபாலிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதனையடுத்து சபாநாயகர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு 185 பக்கங்களை கொண்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை வதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு நாளை விசாரிக்க உள்ளது. இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் எத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்கவுள்ளது என்பதை அறிந்தபின் 2 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் தனபாலிடம் விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடராத கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, தனது விளக்கத்தை கடிதம் வாயிலாக செவ்வாய்க்கிழமைக்குள் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மற்ற இரு எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமைக்குள் விளக்கம் அளித்தாக வேண்டும்.

 

இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் விளக்கம் அளித்த பிறகு அந்த விளக்கத்தை சபாநாயகர் தனபால் ஆய்வு செய்வார். அரசு தலைமை கொறடா அளித்த புகாருக்கு, எம்.எல்.ஏ.க்கள் அளித்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன்பின் அவர்கள் மீதான நடவடிக்கையை மேற்கொள்வார். மூன்று எம்.எல்.ஏ.க்களின் விளக்கத்தையும் ஏற்றால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது. அதேசமயம், விளக்கத்தை ஏற்காவிட்டால் மூன்று பேர் மீதும் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.