கடந்த ஆட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த எஸ்பி வேலுமணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குடைச்சல் கொடுத்து வரும் தமிழக அரசு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. 

கொட நாடு கொலை கொள்ளை வழக்கால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூக்கத்தை தொலைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த எஸ்பி வேலுமணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குடைச்சல் கொடுத்து வரும் தமிழக அரசு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. ஆட்சி மாறினால் ஊழல் வழக்குகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை கையில் எடுத்துள்ளது திமுக அரசு. இந்த வழக்கில் ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமிக்கு திமுக குடைச்சல் கொடுத்து வருகிறது.

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயான், வாளையாறு ரவி, மனோஜ் என மூன்று பேரையும் திமுக கடந்த சில ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்களுக்காக அதிமுக ஆட்சியின் போதுநீதிமன்றத்தில் ஆஜரானதுடன் ஜாமீன்தாரர்களாகவும் திமுகவினரே இருந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாறிய நிலையில் கொடநாடு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தவர்களே அரசு வழக்கறிஞர்களாகியுள்ளனர். அத்துடன் வழக்கில் சயான் திடீரென கொடுத்த வாக்குமூலம் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து திமுக தொடுத்திருக்கும் பிரம்மாஸ்திரமாக பார்க்கப்படுகிறது.

சுமார் மூன்று மணி நேரம் உதகை நீதிமன்றத்தில் சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் கொடநாடு கொள்ளை எங்கு வைத்து திட்டமிடப்பட்டது, கொள்ளை அடிக்கும் போது காவலாளி ராம்பகதூர் கொலை செய்யப்பட்டது எப்படி? கொள்ளைக்கு பிறகு யார் யாருடன் சந்திப்பு நடைபெற்றது? எவ்வளவு பணம் கைமாறியது? கொள்ளை அடித்த பொருட்கள் என்னென்ன? என அனைத்தையும் சயான் புட்டு புட்டு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இவை அனைத்தையும் நீதிமன்றம் அப்படியே பதிவு செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த முதல் தகவல் அறிக்கையில் தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் சேர்க்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3 மணி நேரத்தில் சயான் வாக்குமூலத்தை முடித்த நிலையில் அவர் என்னென்ன கூறினார் என்பதை அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுவிட்டதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்தே கொலை வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படும் என்கிற முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி இந்த கண்டத்தில் இருநது தப்புவது எப்படி என இரவெல்லாம் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறுகிறார்கள். வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னரே அதற்கு தடை பெற முடியுமா? என்கிற ரீதியில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாகவும், இதனால் இரவெல்லாம் அவர் தூங்கவே இல்லை என்கிறார்கள். இதனை அடுத்து மறுநாள் அதிகாலை ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி என கட்சியின் சீனியர்களை தொடர்பு கொண்டதோடு ராமதாஸ், அண்ணாமலை என கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் எடப்பாடி பழனிசாமி செல்போனில் பேசியுள்ளார்.

இதன் பின்னரே சட்டப்பேரவையில் அமளி, தர்ணா எனும் திட்டங்களை தீட்டி எடப்பாடி பழனிசாமி அரங்கேற்றியதாக சொல்கிறார்கள். ஆனால் இவற்றால் எல்லாம் பலன் இல்லை, சட்டப்போராட்டம் தான் சரியாக இருக்கும் என்று சில சீனியர்கள் யோசனை கூற கிரிமினல் வழக்குகளில் இந்திய அளவில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களின் பட்டியலை பெற்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக சொல்கிறார்கள். இதனிடையே எந்த நேரத்திலும் கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயர் சேர்க்கப்படும் என்றும், அதன் பிறகு கைது நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் கோட்டையில் தகவல்கள் சுற்றிக் கொண்டிருக்கிறது.