இன்னும் 15 நாட்களே தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அனலாக தகித்துக் கிடக்கிறது அரசியல் நிலவரம். இந்நிலையில் அதிமுக ஆட்சி கவிழுமா? இல்லை தொடருமா என்கிற விவாதங்கள் விறுவிறுப்படைந்து வருகின்றன. 

இன்னொரு புறம் 4 தொகுதிகளையும் தட்டித் தூக்க வேண்டும் என அதிமுகவும் திமுகவும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. மே மாதம் 23ம் தேதி மதியம் 1 மணிக்கு மேல் நிலவரம் தெரிந்துவிடும். அதற்கு முன்னேற்பாடாக சில அரசியல் காய் நகர்த்தல்கள் இப்போது  நடந்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டல் கழித்தல் கணக்குகள்தான் இப்போது ஏசி ரூமில் டிஸ்கஷன் என்ற பெயரில் நடக்கிறது.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு 22 தொகுதி இடைத்தேர்தலில் 3 சீட் உறுதியாக கிடைக்கும் என நம்புகிறார். அதிமுக தரப்பினரோ அதிகபட்சம் 11, குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கணித்துள்ளது. இந்த கணக்குகள் எல்லாம் பணப்பட்டுவாடாவுக்கு பிறகு நடந்தவை. பணப்பட்டுவாடாவுக்கு முன்பாக 22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனச் சொன்ன டி.டி.வி.தினகரன் தற்போது களநிலவரத்தை உணர்ந்து இறங்கி வந்து இருக்கிறார். அதிமுக பணப்பட்டுவாடா செய்ததை நம்பி 11 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தொடரும் நம்பிக்கையில் இருக்கிறது. திமுக 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறுகிறார்கள்.

 

இதன்படி பார்த்தால் அதிமுக ஆட்சி தொடரும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இன்னும் 15 நாட்களில் உண்மை நிலவரம் தெரிய வரும்போது இதற்கான விடைகள் தெரியவரும்.