கேரளத்தைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் இளவயதில் மேயராகும் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக படுதோல்வியை சந்தித்தது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் நடந்து முடிந்த தேர்தலில் அதிகளவு இளவயதினரை தேர்தல் களம் இறக்கினர். 

அந்த வகையில் முடவன்முகலைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர்யா ராஜேந்திரன் தேர்தலில் போட்டியிட்டு அப்பகுதியின் மாமன்றப் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், 21 வயதான ஆர்யாவை தற்போது திருவனந்தபுரம் மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மிக இளம்வயதில் மாநகராட்சி மேயராகும் சாதனையை ஆர்யா படைத்துள்ளார். 

ஆல் செயின்ட் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.