நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு இன்று இரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 4வது முறையாக பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார். 

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது. உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர். 

மக்களின் ஒத்துழைப்பால், கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றார்.

மேலும், 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது. வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என்றும் கூறியுள்ளார்.