தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இந்த ஆண்டு புதிதாக 2000 பேருந்துகள் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொது மக்களின் சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2,000 பேருந்துகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்  என தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும் 

மேலும், தமிழகத்தில் 96 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் .32 மாவட்டத்தில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உலக தரம்வாய்ந்த தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்படும். ஈரோடு அரசு மருத்துவமனை ரூ.67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.