அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டப்பேரவை தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்னர். ஆளும் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். 

அதிமுக கூட்டணியில், முதல் கட்சியாக, பாமகவுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக, பாஜக உடன் கூட்டணி பேச்சு துவங்கியது. பாஜக தரப்பில், முதலில் 60 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதைக்கண்டு அதிமுக அதிர்ச்சியடைந்தது. பேச்சுவார்த்தையின்போது, 40 தொகுதிகள் வேண்டும் என பாஜக பிடிவாதம் பிடித்தது. அதிமுக தரப்பில், 15 தொகுதிகளில் இருந்து பேரத்தை தொடங்கினர். இதனால் பேச்சில் இழுபறி ஏற்பட்டது.

கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு  தமிழகத்தில், 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளன. இடைத்தேர்தல் நடக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வர், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பாஜக தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.