டி.டி.வி. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சத்ய நாராயணன் , 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வெய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும், தேர்தலை சந்திப்பது என்றும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்  அடிப்படையில், 18 சட்டசபை தொகுதிகளும் , திமுக  தலைவர் கருணாநிதி, அதிமுக  எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் மறைவு காரணமாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளும் காலியாக உள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக,நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அந்த தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடத்துவதில் சிக்கல் உள்ளது. 

இது தவிர, மற்ற தொகுதி களில், எப்போது வேண்டு மானாலும், இடை தேர்தல் நடத்தப் படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காலியாக உள்ள, 20 தொகுதிகளிலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என,மத்திய உளவு துறை ரகசிய சர்வே  எடுத்தது. அதில், திமுக விற்கு, 14 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு  4 தொகுதிகளிலும், அமமுகவுக்கு  2 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என தெரியவந்துள்ளது..

இந்த 20 தொகுதிகளில்  தேர்தல் நடந்தால் அதிமுக குறைந்தது, ஆறு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் தான், ஆட்சியை தக்கவைக்க முடியும். அதற்கு கீழே குறைந்தால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும்.

இதையடுத்த அதிர்ச்சி அடைந்த எடப்பாடி அரசு எப்பாடுபட்டாவது  தேர்தலை ஒத்தி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கஜா புயல் காரணமாக தமிழக அரசு இடைத் தேர்தலை ரத்து செய்ய கேட்டுக் கொண்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

அதன்படி புயல் பாதிப்பையும், ஜனவரி வரை மழை நீடிக்கும் என்ற, வானிலை எச்சரிக்கை  முடிவையும்  காரணம் காட்டி, இடைத்தேர்தலை ஒத்தி வைக்கும்படி கேட்க  மாநில அரசு முடிவு செய்து உள்ளது. 
அவ்வாறு செய்தால், அதை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் துவக்கத்தில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் 20 சட்டசபை தொகுதிகளுக்கும், இணைந்தே, தேர்தல் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகதெரிகிறது.