திருக்கோயில்களில் காணிக்கையாக  செலுத்தப்படும் தங்க நகைகளில் சேதாரம் அடைந்த நகைகளை முறைப்படுத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் சரிபார்த்து, பின்னர் நகைகளை உருக்க திட்டமிடப்பட்டது. 

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பற்றிய சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்துதான் இந்தக் கூட்டம் நடைபெற்றது. திருக்கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தங்க நகைகளில் சேதாரம் அடைந்த நகைகளை முறைப்படுத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் சரிபார்த்து, பின்னர் நகைகளை உருக்க திட்டமிடப்பட்டது. அதில் பெறப்படுகிற வைப்பு தொகையை அந்தந்த திருக்கோவில்களின் வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

அந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதலாவதாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் செலுத்தப்பட்ட தங்க நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசின் நிறுவனம் மூலம் உருக்கி, எஸ்பிஐ வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட உள்ளது. பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தலா ஒரு லட்சத்தை வைப்பு நிதியாக தமிழக அரசு வழங்கியிருந்தது. அதிலிருந்து பெறப்பட்ட வட்டி தொகை கோயில்களின் ஒரு கால பூஜைக்குப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவையெல்லாம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று ஆலோசிக்கப்பட்டது.

கோயில்களில் உள்ள 9,857 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மலைக் கோவில்களில் ரோப் கார்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத் துறையில் இரண்டு பயிற்சி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 6 பயிற்சி பள்ளிகள் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும். இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்த 1,146 நபர்களிடமிருந்து அந்த நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக 753 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4 லட்ச ஏக்கருக்கும் அதிகமாக திருக்கோயில்களின் நிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஆக்கிரமிப்பு நிலங்களை முழுமையாகத் திரும்பப் பெற பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அகத்தீஸ்வரர் கோயில் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் படியே இந்து சமய அறநிலையத் துறை செயல்படும். தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.