பிரதமர் மோடி முதல் முறையாக  ஆட்சிக்கு வந்த ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் தள்ளிப் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை வேகம் பிடித்தது. ஆனால் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் முதல் கட்டமாக குறிப்பிட்ட  ரயில்களை  மட்டும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி  கீழ், ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல் - தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சோதனை அடிப்படையில் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன.

இதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொடுக்க வேண்டும் என்பதே.

ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்படும். இந்த ரயில்களில், எவ்வித கட்டண சலுகையோ, ரயில்வே ஊழியர்களுக்கான சலுகையோ கிடையாது.

இந்த ரயில்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணையாக, இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேம்படுத்தப்படும். இதைத் தவிர கூடுதல் வசதிகளையும், ஐ.ஆர்.சி.டி.சி., மேற்கொள்ளும்.

பயணியர் கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., நிர்ணயித்து கொள்ளலாம். அதே நேரத்தில், ரயில்வேயின் இன்ஜின், டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்படுவதால், அந்த நிறுவனங்களின் பெயர்களில் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது..