மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. மேலும் 18 மாநிலங்கள் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 52 மட்டுமே. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க 55 உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளதால், இதனால் கடந்த முறைபோன்று இந்த முறையும் எதிர்கட்சி அந்தஸ்து கை நழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான இடங்கள் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையூ, குஜராத், அரியானா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. 

ஆனால், இம்மாநிலங்களில் பாஜகவின் வாக்கு வாங்கி  50 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு காங்கிரசிடம் பறி கொடுத்த மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரசின் தோல்வி முகம் அங்கும் தொடர் கதையாகி உள்ளது. அதேபோல், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, சிக்கிம், அந்தமான், தாதர் நாகர் ஹவேலி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.